மன்னர் தேவை
மரகதபுரி மன்னர் நோய்வாய்ப்பட்டு படுத்து கிடந்தார். அவருக்கு பின் பட்ட்த்துக்கு வரவேண்டிய இளவரசர் மகேந்திரன் தனக்கு இராஜ்ய பரிபாலனை வேண்டாம் என்றும் தான் ஒரு வைத்தியராக இருக்கவே விருப்பம் தெரிவித்தார். இதனால் மகதபுரிக்கு அடுத்து யாரை மன்னனாக்க போகிறார்கள் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
மன்னனின் உடல் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் அவருக்கு இறப்பு ஏற்படலாம். அதற்குள் ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் முடி சூட்டிக்கொள்ள வேண்டும்.மன்னரை பார்க்க மந்திரியார் உள்ளே வருகிறார்.
மன்னர் மந்திரியாரை கண்டவுடன் வாருங்கள் மந்திரியாரே என்று அழைக்கிறார். எப்படி இருக்கிறீர்கள் மன்னா? கவலையுடன் கேட்டார் மந்திரியார்.
அப்படியேதான் இருக்கிறேன். எனக்கு பின்னால் அடுத்து ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்ற கவலைதான் என் உள்ளத்தை அரித்துக்கொண்டிருக்கிறது.
மந்திரியார் மன்னரை பார்த்து இளவரசர் ஆட்சி புரிய ஒத்துக்கொண்டால் நமக்கு இந்த பிரச்சினை வந்திருக்காது என்று சொன்னார்.
மன்னர் வருத்தத்துடன் அவன் ஆட்சிக்கு வரமாட்டான் என்று இவன் பிறக்கும்போதே ஜோசியர் சொல்லிவிட்டார் மந்திரியாரே என்று சொல்லவும், மந்திரியார் வியப்புடன் இது எப்பொழுது மன்னா? என்று வியப்புடன் கேட்டார்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நானும் இளவரசனின் அம்மாவும் ஒரு முறை ஆன்மீக சுற்றுப்பயணம் போனோமே. அப்பொழுது இளவரசன் இவள் வயிற்றில் இருந்தான். ஒரு ஊர் சென்று இரவாகிவிட்டதால் அங்கேயே தங்கி விட்டோம். ஆனால் அன்று இரவில் இவளுக்கு வலி கண்டு அவசர அவசரமாய் அந்த ஊரில் பிரசவம் பார்க்கும் ஒரு வைத்திய பெண்ணை கூப்பிட்டோம்.அந்த பெண்ணோ என் மகளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கப்போகிறது, இந்த கட்டத்தில் நான் அங்கு வந்து விட்டால் என் மகள் கதி என்னவாவது? என்று கேட்டாள். வேண்டுமானால் அரசியை எனது இல்லத்துக்கு கூட்டி வந்து விடுங்கள், நான் இங்கேயே வைத்து பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள். நானும் ராணியை அழைத்துக்கொண்டு இவள் இல்லத்திற்கு சென்றேன். சென்ற அரை நாழிகையில் இவளுக்கு இளவரசன் பிறந்து விட்டான். வேடிக்கை என்னவென்றால் அந்த வைத்திய பெண்ணிற்கும் அதே நேரத்தில் ஒரு ஆண் மகன் பிறந்தான். இரு பெண்களின் பிரசவத்தையும் அந்த பெண் பிரமாதமாய் கையாண்டு இரண்டு குழந்தைகளையும் எடுத்து கொடுத்தாள்.
ஆனால் மந்திரியாரே என்று இழுக்கவும், என்ன மன்னா? இவனின் பிறந்த நேரத்தையும், இவனையும் ஒத்து பார்த்த நம் ஜோசியர் இவனுக்கு எதிர்காலத்தில் மருத்துவத்தில் நிபுணனாகக்கூடிய தகுதி இருக்கிறது, ஆனால் மன்னனாக கூடிய தகுதி இருக்காது என்று சொல்லிவிட்டார். நான் இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. காரணம் இவனுக்கு ஆட்சி புரிய ஆசை இல்லை என்றால் நாட்டில் குழப்பமும், தொல்லையும் வரும் என்றுதான் பேசாமல் இருந்து விட்டேன். அதன்படியே இப்பொழுது அடுத்து யார் என்று குழப்பம் வந்து விட்டது.
சிறிது நேரம் யோசித்து கொண்டே இருந்த மந்திரியார், மன்னா தங்களிடம் ஒரு கேள்வி, நீங்கள் இளவரசனை பெற்றெடுத்தது எந்த ஊர்? என்று கேட்டார். மன்னர் சாமளாபுரம் என்று சொன்னார். மந்திரியார் நான் வருகிறேன் மன்னா என்று அவசரமாய் விடை பெற்றார்.
ஒரு நாள் கழித்து மீண்டும் மன்னரை பார்க்க வந்தார். கூடவே ஒரு இளைஞனையும் அழைத்து வந்தார். மன்னா இந்த சிறுவனை நன்றாக பாருங்கள் என்று சொன்னார். மன்னர் சிறிது நேரம் உற்று பார்த்து ஒன்றும் புரியவில்லை மந்திரியாரே என்று சொன்னார். ஒரு நிமிடம் மன்னா, என்று அவரிடம் அனுமதி கேட்டு விட்டு அந்த இளைஞனை நீங்கள் முன்னறையில் ஓய்வெடுங்கள், மன்னரிடம் பேசி விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு மீண்டும் மன்னரை காண வந்தார்.
மன்னா என்னுடன் வந்த இளைஞனை நன்றாக பார்த்தீர்கள் அல்லவா? உங்களுக்கு ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா? என்று கேட்டார், மன்னர் நான் உடல் நலம் இல்லாமல் இருப்பதால் என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு, ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்று கேட்டார்.
மன்னா உங்களுக்கு அடுத்து இந்த இளைஞனுக்குத்தான் ஆட்சியை கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் அமைதியாக சொன்னார்.
மந்திரியாரே என்ன சொல்கிறீர்கள்.திடீரென்று யாரோ ஒரு இளைஞனை கூட்டிக்கொண்டு வந்து இவனை அரசனாக்க வேண்டும் என்கிறீர்களே?வருத்த்த்துடன் கேட்டார்.
மன்னா வருத்தப்படாதீர்கள், இந்த இளைஞன் வேறு யாருமல்ல உங்களுடைய உண்மையாக வாரிசு என்று சொல்லவும், மந்திரியாரே என்ன சொல்கிறீர்கள் அதிர்ச்சியுடன் கேட்டார் மன்னர்.
ஆம் மன்னா, நீங்கள் இளவரசரை பெற்றெடுக்க அந்த வைத்தியரின் இல்லத்துக்கு சென்றீர்கள் அல்லவா, அன்று அந்த வைத்தியப்பெண் வேண்டுமென்றே அவள் மகள் பெற்றெடுத்த குழந்தையை ராணி பெற்றெடுத்த குழந்தை என்று கொடுத்து விட்டாள். தனது பேரன் நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசையினால் அந்த காரியத்தை செய்திருக்கிறாள். இது நீங்கள் உங்கள் மகனை பெற்றெத்த கதையை சொன்ன பின் தான் மனதுக்குள் இப்படி நடந்திருக்கலாமோ என்ற சந்தேகம் வந்த்து. நேற்று அந்த ஊருக்கு போய் அந்த வைத்திய பெண்ணிடம் விசாரித்த்தில் எல்லா உண்மைகளும் சொல்லி விட்டாள். கூடவே அவள் வளர்த்து வந்த அந்த இளைஞனையும் என்னுடன் அனுப்பி வைத்தாள்.
மன்னர் பெருமூச்சுடன் இப்பொழுதுதான் எனக்கு நிம்மதி வந்தது மந்திரியாரே.
உங்களுக்கு மிக்க நன்றி.நான் என் மகனை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும் அதற்கு ஏற்பாடுகள் செய்வீர்களா?
கொஞ்சம் பொறுங்கள் மன்னா, அந்த இளைஞனுக்கு அரசராகக்கூடிய தகுதிகளை நன்கு கற்றுக்கொடுத்து அதன் பின்னால் உங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறோம். அதன் பின் நீங்கள் அவனுக்கு முடிசூட்டி மகிழலாம். அதுவரை சற்று பொறுமை காக்கவும்.
மிகவும் நல்லது மந்திரியாரே. எனது மகனே ஆனாலும் அவனுக்கு அரசர் ஆவதற்கு தகுதி இருந்தால்தான் மன்னராக ஆக முடியும். நீங்கள் மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்யுங்கள். நான் காத்திருக்கிறேன்.
மன்னா தங்களிடம் ஒரு கேள்வி, இதுவரை உங்கள் மகனாக நினைத்து வளர்த்து வருகிறீர்களே, அந்த இளைஞனை வெறுத்து விடுவீர்களா?
என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே, இதுவரை மகனாக நினைத்து வளர்த்து விட்டு மகனில்லை என்பதற்காக அவனை வெறுக்க முடியுமா? அவனும் என் மகன்தான். அவனை இந்த உலகமே போற்றும் ஒரு வைத்தியனாக ஆகவேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
Comments
Post a Comment