கூட்டுயர்வே நாட்டுயர்வு
அரச்சலூர் என்னும் கிராமம் ஒன்று இருந்தது, அந்த கிராமத்தில் ஏராளமான வீடுகள் இருந்தன.அங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வந்தனர். இருந்தாலும் அந்த ஊரில்,ஆறுகளோ குட்டைகளோ இல்லை. கிணற்றை தோண்டித்தான் நீர் எடுத்து குடி நீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவர். வசதியற்ற விவசாயிகள் மழை நீரை நம்பியே இருந்தனர்.மழை பெய்ய தவறி விட்டால் அந்த போகம் அவர்களுக்கு விளையாமல் போய் விடும். இதனால் வறுமை அவர்களை வந்து சூழ்ந்து கொள்ளும்.
அந்த கிராமத்தில் கஞ்சப்பன் என்னும் ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். அவன் பொது நலனை பற்றியே சிந்திப்பவன்.. அவனும் மழையை நம்பியே விவசாயம் செய்து வந்தான்.அவனுக்கு ஏழை விவசாயிகள் அனைவருக்கும் பொதுவான கிணறு தோண்டி, ஏழை விவசாயிகள் அனைவரும் விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசை. ஆசை இருந்து என்ன பயன். மற்ற விவசாயிகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டுமே? அவர்களை குறை கூறவும் முடியாது, காரணம் அன்றன்று ஏதொவொரு வேலைக்கு போனால்தான் அன்றாடம் சாப்பாட்டுக்காவது வழி பிறக்கும். அப்படி இருக்கையில் கஞ்சப்பனை போல அவர்களுக்கு அதைப்பற்றி சிந்திக்க நேரமுமில்லை. வழியுமில்லை. கஞ்சப்பனுக்கோ அது கனவாகவே இருந்தது.
இப்படி இருக்கையில் அந்த ஊருக்கு துறவி ஒருவர் வந்தார். அவர் போகும் இடமெல்லாம் மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற உபதேசம் மட்டுமே செய்து வந்தார். யார் எந்த எளிய உணவை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் உண்டு உறங்குவார். அவரை காண வசதியானவர்கள் உயரிய பொருட்களை கொண்டு வந்தாலும் கையால் தொட்டு ஆசிர்வாதம் செய்து விட்டு அதை ஏழைகளுக்கு கொடுத்து விடுவார்.
ஒரு நாள் அவர் தியானத்தில் இருந்த பொழுது கஞ்சப்பன் அவரை காண்பதற்காக வந்தான். அவர் தியானத்தில் இருப்பதால், அவர் கண் விழிக்கும் வரை காத்திருந்தான். கண் விழித்த துறவி கஞ்சப்பனை பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டார். ஐயா எங்களைப்போல உள்ள விவசாயிகள் மழையை மட்டும் நம்பாமல் விவசாயம் செய்ய ஒரு கிணறு வேண்டும் என்று அவனது ஆசையை அவரிடம் சொன்னான். அவர் புன்னகையுடன் உன் ஒருவனால் கிணறு தோண்ட முடியுமா? என்று கேட்டார்.
முடியும் ஐயா, ஆனால் அதற்கு என் உழைப்பை மட்டுமே கொடுக்க முடியும். அதனால் நீண்ட காலம் ஆகி விடும், என்று சொல்ல, உன் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன், என்று சொன்னவர் உன் நிலத்துக்கு அருகில் பொதுவான இடம் உள்ளதா என்று கேட்டார்.உள்ளது ஐயா என்றவனிடம், வா வந்து காட்டு என்று சொல்லி அவனுடன் கிளம்பி விட்டார்.
கஞ்சப்பனுடன் துறவி நடந்து செல்வதை பார்த்தவர்கள் இவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று ஆவலுடன் அவர்களை பின் தொடர்ந்தனர். கஞ்சப்பன்,தன் நிலத்துக்கும்,சுற்றியுள்ளவர்கள் நிலத்துக்கும் பொதுவான இடத்தை காண்பித்தான். துறவி அந்த இடத்தை பார்வையிட்டு அங்கு கிணறு இருந்தால், அதை சுற்றி உள்ள இடங்களுக்கு நீர் வசதி கிடைக்குமா என்று கணக்கிட்டு பார்த்தார். கிடைக்கும் என்று முடிவு செய்தவர் அந்த பொதுவான இடத்தில் நின்று சில நிமிடங்கள் கண்ணை மூடி மந்திரங்கள் சொன்னார்.
இவர் என்ன செய்கிறார் என்று ஊர் மக்கள் ஆவலுடன் பார்த்தனர். அதற்குள் அவரை சுற்றி ஊர் மக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.
இந்த இடம் யாருக்கு சொந்தம்? உரத்த குரலில் கேட்டார். அனைவரும் அமைதியாக நின்றனர். ஊர் பெரிய மனிதர் முன்னால் வந்து ஐயா இது ஊர் பொதுவான இடம் என்று சொன்னார். இந்த இடத்தில் புதையல் இருப்பது என் கண்களுக்கு தெரிகிறது, ஆனால் அது அடி ஆழத்தில் இருக்கிறது. என்று சொன்னவுடன் “புதையலா” என்று ஊர் மக்கள் ஆவலுடன் கேட்டனர். ஆம் ஆனால் இந்த புதையலை எடுத்தால் இந்த ஊருக்கே பொதுவாகிவிடும்.
ஐயா நாங்கள் செலவு செய்து எடுக்கிறோம், என்று வந்த வசதியான
விவசாயிகளை இவர் தடுத்து “அந்த புதையல் எடுக்க எல்லாரும் பாடுபட்டால்தான்
கிடைப்பேன் என்கிறது என்றார்.அதற்கு என்ன செய்வது என்று ஊர் மக்கள் திகைத்து நின்றனர்.
துறவி எல்லோரையும் பார்த்து சொன்னார். ஒரு வழி இருக்கிறது. இந்த
ஊர்க்காரர்கள் குடும்பத்திற்கு ஒருவர் தினமும் ஒரு மணி நாழிகை இந்த புதையல் எடுப்பதற்கு உதவ வேண்டும்.
ஏழை விவசாயிகள் மட்டும் தினமும் மூன்று மணி நாழிகை இந்த புதையலை எடுக்க உதவ வேண்டும்.
அவர்களுக்கு மட்டும் ஏன் மூன்று மணி நாழிகை என்று கேட்டார்கள் ஊர் மக்கள். அவர்கள் இந்த நிலத்திற்கு அருகில் இருப்பதாலும், காலையில் மற்ற தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று விடுவதாலும், ஒரு நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு மூன்று மணி நேரம் ஒதுக்கி உள்ளேன். வசதி உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உதவி செய்தால் போதும்.
ஐயா கிடைக்கும் புதையல் பொதுதானே என்று ஊர் மக்களில் சிலர் கேட்டனர். துறவி சிரித்துக்கொண்டு பொதுதான், ஆனால் இவர்கள் மூன்று மணி நேரம் உழைப்பதால், கிடைக்கும் புதையலில் நான்கில் இரு பங்கை இவர்களுக்கு கொடுத்து விடலாம், மற்ற இரண்டு பங்கை ஊர் மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம், என்ன சொல்கிறீர்கள்.
துறவியின் பேச்சுக்கு ஊர் மக்கள் எதுவும் சொல்லாமல் மெளனமாக நிற்க, என்ன சொல்கிறீர்கள்? இவர்களை வேலை ஆரம்பிக்க சொல்லி விடலாமா? நீங்கள் சரி என்றால்தான் இந்த புதையலே இங்குள்ள மக்களுக்கு கிடைக்கும். சொல்லிவிட்டு அவர்கள் முகத்தை பார்க்க அவர்கள் சரி..சரி..என்று சொன்னார்கள்.
நான் இன்னும் நான்கு மாதங்கள் கழித்து இங்கு வந்து உங்கள் புதையலை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
கஞ்சப்பனை சுற்றியுள்ள அவனது பக்கத்து நிலத்துக்காரர்களும், வேலைக்கு சென்று வந்தது போக மற்ற நேரங்களில் புதையல் கிடைக்கும் என்று வேலை செய்தனர். கஞ்சப்பனுக்கு துறவி நல்ல்துக்குத்தான் சொல்லியிருப்பார் என்ற நம்பிக்கையில் இரவும் பகலும் புதையல் எடுக்க வேலை செய்தான்.துறவி சொன்னது போல ஊரில் உள்ள அனைத்து குடும்பத்தில் இருந்து ஒருவர் தினமும் ஒரு மணி நாழிகை இந்த புதையல் எடுப்பதற்கு உதவி புரிந்தனர்.
நான்கு மாதம் கழித்து அங்கு வந்த துறவியிடம் ஐயா நீங்கள் சொன்ன புதையல் கிடைக்கவேயில்லை, அதற்கு மேல் எங்களால் தோண்டி பார்க்க முடியவில்லை, காரணம் அந்த குழிக்குள் தண்ணீர் நிறைந்து விட்டது.அதை தினமும் கஞ்சப்பன், மற்றும் சுற்றுப்புறமுள்ள நிலங்களுக்கு பாய்ச்சியும் பார்த்தாகி விட்டது. தண்ணீர் மட்டும் குறையவே இல்லை. இனி எப்படி புதையலை எடுப்பது என்று கேட்டனர்.
துறவி சிரித்துக்கொண்டே பரவாயில்லை, அந்த புதையல் கிடைக்கவில்லை என்றாலும் இந்த தண்ணீர் உங்களுக்கு கிடைத்ததே என்று சந்தோசப்படுங்கள்.இந்த குழியை சுற்றியுள்ள நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சியும் மிச்சம் இருக்கிறதா? ஆம் ஐயா என்று சொன்ன மக்களிடம் இனிமேல் அதை ஊர் மக்கள் குடி நீராகவும் பயன்படுத்தலாமே? என்று கேட்ட துறவியிடம் இவர்கள் ஆமாம் பயன்படுத்தலாம் என்று சம்மதம் தெரிவித்தனர்.
காலப்போக்கில் இந்த தண்ணீர்தான் துறவி சொன்ன புதையல் என்று ஊர் மக்கள் புரிந்து கொண்டனர். கஞ்சப்பனும், அவன் அருகில் இருந்த ஏழை விவசாயிகளும், துறவி சொன்ன “நாலில் இரு பங்கு தண்ணீரை” மட்டும் விவசாயத்திற்கு எடுத்துக்கொண்டு மற்ற நீரை ஊரின் குடி நீர் தேவைக்கு கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
Comments
Post a Comment