விண்டாஷ் - 107
பள்ளிக்கூடம் விட்டு வந்த மணிமேகலை கை முகம் கழுவ குழாயை நோக்கி நடந்தாள். "ஐயோ.. இதென்ன?'' குழாய்க்கருகே கண்ட பொருள் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திச்சு.
வட்டவடிவில் ஒரு குட்டி விமானம்!
மேகலை அதன் அருகே செல்லவும் அதோட கதவு திறக்கவும் சரியாக இருந்திச்சு.
அதுக்குள்ளே
யாராவது இருக்காங்களாண்ணு எட்டிப் பாத்தா. யாரும் இல்ல. உள்ளே தான் போய்ப்
பார்ப்போமேணு நெனச்சு அந்த குட்டி விமானத்துக்குள்ளே ஏறினாள்.
" டப்''
ங்கர சத்தத்தோட அதோட கதவு தானே மூடிக்கிச்சு. கதவு மூடிக்கிட்டதும்
அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சின்னச் சின்ன விளக்குகள் மின்னி மின்னி மறைய
வட்ட வடிவிலொரு நாற்காலி அவளை நோக்கி நகர்ந்து வந்தது. அவளருகே வந்ததும்
அது நிண்ணுச்சு.
மேகலை
துணிச்சலோடு அதில் ஏறி உட்காந்தா. அவ்வளவுதான் அது அவளைச் சுமந்துகிட்டு
மின்னும் பொத்தான்கள் நிறைஞ்சிருக்கிற மேசைக்கருகே போய் நிண்ணுச்சசு.
ஒரு
பச்சை வண்ண பொத்தான் விட்டு விட்டு எரிஞ்சிட்டிருக்கறதைப் பாத்த மேகலை
அதில் தன் விரலை வைச்சா. அவ்வளவுதான் "பீப் பீப்...''ங்கற மாதிரி வினோதமான
சத்தம் கேட்டிச்சு. மேசைக்கு முன்னாலெ தெரிஞ்ச திரையில் பல நிற கோடுகள்
கோலங்கள் வரைஞ்சது. கடைசியிலெ "தமிழில் சிந்திக்கும் பூமியின் ஊயிரே வருக''
அப்படீங்கற வாக்கியம் மின்னி மின்னி வந்து பின்னே நிலைச்சு நின்னுது.
மறுபடியும் அந்தப் பச்சை நிற பொத்தான் மின்னத் தொடங்கிச்சு.
"பயப்படாதே... நீ விண்டாஷ் - 107 என்ற விண்ணுலகிற்குச் செல்லப் போகிறாய்'' என்ற வாக்கியம் திரையில் தோன்றி மறைஞ்சுது.
அவள்
அவ்வாக்கியத்தை வாசித்து முடித்ததும் "விண்டாஷ் - 107 என்பது எங்கள்
நாட்டின் பெயர்'' அப்படீங்கற வாக்கியம் திரையில் வந்திச்சு.. அதை வாசித்த
மேகலைக்கு ஒரே ஆச்சரியம். நான் நெனக்கிறது எப்படி இந்த விமானத்திற்குத்
தெரியுது?
"பயப்படாதே! நான் எங்கள் நாட்டிலுள்ள மிகச் சிறந்த திறன் பெற்ற கணினிகளில் ஒன்று'' என்ற வாக்கியம் தோன்றியது.
மேகலை சட்டென பொத்தானிலிருந்து கையை எடுத்தாள். உடனே திரையும் அணைஞ்சுது.
" ஓ. !
இந்தப் பொத்தானில் கையை வைச்சா மட்டும்தான் இக்கணினியால் நான் நெனக்கிறதைத்
தெரிஞ்சுக்க முடியுதுணு தெரிஞ்சுகிட்டா. அவளுக்குக் கொஞ்சம் துணிச்சல்
வந்திச்சு..
அவள் மெல்ல வெளியே பார்த்தாள். சில ஒளிக்கோளங்கள் பெரிதாகத் தெரிந்து பிறகு சிறியதாகி சிறியதாகி மறைஞ்சு போச்சு.
மேகலை
நாற்காலியைக் குட்டி விமானத்தின் ஜன்னலுக்கு அருகே கொண்டு போனா. கீழே ஒரு
ஒளி கோளம் சிறிசாகிகிட்டே இருந்திச்சு. "நான் ரொம்ப வேகமாக மேல
போய்ட்டிருக்கிறேன்ணு'' மனசுல நெனச்சுக்கிட்டா.
.
இந்த விமானத்தின் வேகம் எத்தனை இருக்கும்ணு நினைச்சுகிட்டே பச்சைப் பொத்தானில் விரலை வைச்சா.
"வினாடிக்கு 1800 கிலோ மீட்டர்'' திரை பதில் சொல்லிச்சு..
சற்று
நேரம் இந்தக் கணினியுடன் விளையாடுவோம்ணு முடிவு செஞ்சா மணிமேகலை.. அப்போ
சட்ணு அவளுக்கு அந்த ஞாபகம் வந்திச்சு. தன் பாவாடையிலிருந்த பையைத்
தொட்டுப்பாத்துகிட்டா. பாவாடைப் பையில அந்தப் பொட்டலம் பத்திரமாக
இருதிச்சு.
மேகலை
பாவாடைப் பைக்குள் கையை விட்டு அந்த பொட்டலத்தை எடுத்தாள். பொட்டலத்தைப்
பிரிச்சா. உடனே கணினியிலிருந்து பல்வேறு ஒலிகள் கேட்டுச்சு. சட்டென
கணினித்திரை நீலநிறமாச்சு. அப்புறம் சிவப்பு நிறத்தில் "அபாயம்'' ங்கற
வார்த்தை வந்து வந்து போச்சு. அதுமட்டுமல்ல அந்தக் குட்டி விமானமே
இப்படியும் அப்படியும் ஆடத் தொடங்கிச்சு..
மணிமேகலை கையிலுள்ள பொருளைப் பொட்டலமாக்கி மறுபடியும் பாவாடைப் பைக்குள் வச்சா.
"எங்கிட்ட
இருக்கற இந்தப் பொருளைப் பாத்து இந்த கணினியே பயப்படுது. அதனாலெ நான்
பயப்படத்தேவையில்லை. தேவைப்படும்போது இந்தப் பொருளை எடுக்கலாம்''
அப்படீண்ணு நினைச்சவளுக்கு நல்ல தைரியம் வந்திச்சு.
.
விண்டாஷ்
- 107 க்கு இன்னும் எத்தனை நேரம் பயணம் இருக்கிறதோ என்று நெனச்சுகிட்டே
பொத்தானில் கையை வைக்க "3 நிமிடம், 25 நொடி 32 குறுநொடி'' அப்படீங்கற
தகவல் கணினித் திரையில் வந்து நின்ணுச்சு.
விமானத்தின்
முன்னால் ஒரு மின்மினிப் பூச்சியின் வெளிச்சம் போலத் தெரிஞ்ச ஒரு கோளம்
பந்துபோல் பெரிசாகிட்டே வந்துச்சு. கொஞ்ச நேரத்திக்குள்ளே அந்த
ஒளிக்கோளத்தைப் பார்க்க முடியாத அளவுக்கு பிரகாசமான ஒளி கண்ணைக் கூசிச்சு.
கண்ணைக்
கசக்காமல் சற்று நேரம் அந்த ஒளிக்கோளத்தையே உத்துப் பாக்க வெளிச்சம்
கண்ணுக்குப் பழகிப் போய் அந்த கோளத்தை தெளிவாகப் பாக்க முடிஞ்சுது.
மேகலை
பயணிக்கும் குட்டி விமானத்தின் வேகம் குறையத் தொடங்கிச்சு. அந்த
ஒளிக்கோளத்தைச் சுத்தி வேறு சில குட்டி விமானங்களும் பறந்திட்டிருந்திச்சு.
அதிலெல்லாமே யாருமே இல்லை. அது தானா ஒடற விமானங்க.
மேகலையின்
விமானம் இப்போ அசையாமல் நிண்ணுச்சு.. விமானத்தைச் சுற்றி வெள்ளைப் புகை
பரவிச்சு.. ரெண்டு இரும்புக் கைகள் நீண்டு வந்து அந்த விமானத்தை அப்படியே
இழுத்து ஒரு திட்டின் மேல் வைச்சுது மேகலைக்கு கொஞ்சம் பயம் வந்துச்சு. .
இருந்தாலும் அதை வெளிக்காட்டாம சமாளித்தாள். விமானத்தோடு கதவுகள் தானா
திறந்திஞ்சு. அந்த அசையும் வட்ட நாற்காலி அவளையும் சுமந்துகிட்டு அந்தத்
திட்டிற்குப்போச்சு.
அவள்
சுற்றும்முற்றும் பார்த்தாள். இவங்க எல்லாம் யார் மனுஷங்களா இல்லை
யந்திரங்களா..? எல்லாரும் கண்ணாடியால் செஞ்சது மாதிரி பள பள வென மின்னுகிற
உடைகளை போட்டிருந்தாங்க. அவசர அவசரமாக இங்கும் அங்கும்
நடந்துகிட்டிருந்தாங்க.
அதில்
ஒருவர் மேகலையோட அருகே வந்தாரு. அவரோட ஆள்காட்டி விரலை அவளுக்கு நேராக
நீட்டினார். அவ்விரலில்லிருந்து ஒளிக்கற்றைகள் பாஞ்சு வந்து அவளைச் சுத்தி
ஒரு கண்ணாடி ஆடையை உருவாக்கிச்சு.
மேகலை தலையைத் திருப்பி விந்தை உலகான விண்டாஷ் - 107 இல் என்னென்ன நடக்குதுண்ணு கவனிச்சா.
அவளை
ஏற்றி வந்தது போல் நூற்றுக்கணக்கான விமானங்கள் தரையிறங்குது. வேறு சில
விமானங்கள் கிளம்பிப் போகுது. ஆனால் துளிச் சத்தம் கூட இல்லை. அந்த
விமானங்களில கதவு மேற்பகுதியில் அமைந்திருந்துச்சு. அதுக்குள்ளே கண்ணாடி
மனுஷங்களோட தலைகள் தெரிந்திச்சு.
.
விண்டாஷ்
107 - ன் ஆகாயமும் பூமியின் ஆகாயம் போலத்தான் இருந்திச்சு. ஆனால் சிவப்பு
நிறக் கதிர்கள் குறுக்கும் நெடுக்கும் பாஞ்சுகிட்டே இருந்துச்சு.. இவை
என்னவாக இருக்கும் என்று கூர்ந்து பாக்கறதுக்குள்ளே மஞ்சள் வெள்ளை நிற
ஒளிக்கதிர்களும் சிவப்புக்கதிர்களோடு சேந்துகிச்சு.
"ஒலிம்பிக்
விளையாட்டுப் போட்டி நடக்கும்போது இது மாதிரி லேசர் கதிர்களால் உருவங்கள்
அமைப்பதைப் பார்த்திருக்கிறேன். அதைப்போல ஏதாவது இருக்கலாம்ணு நெனச்சா
மணிமேகலை.
அதுக்குள்ளே
அந்த ஒளிக்கதிர்கள் வானத்திலெ "பூமியின் ஊயிரே வருக வருக...'' என்ற
நடமாடும் எழுத்துகளை உருவாக்கிச்சு. மேகலைக்கு பெருமிதமாக இருந்திச்சு. இது
போன்ற வரவேற்பு வேறு யாருக்குமே கிடைத்திருக்காதுணு நெனச்சா.
மேற்பகுதி
திறந்திருந்த ஒரு விமானம் அவளுக்கு அருகே அமைதியாக வந்து நிண்ணுச்சு.
மேகலை அதில் ஏறினாள். அது அவளையும் ஏத்திகிட்டு பூப் போலச் கொஞ்ச தூரம்
பறந்து நீலநிற புகைக்குள் நுழைஞ்சுது. புகைக்குள்ளே தெரிஞ்ச கதவோட அருகே
போய் அந்த விமானம் நிண்ணுச்சு மணிமேகலை கதவை நோக்கி கை நீட்டறதுக்குள்ளே
கதவு தானாகத் திறந்துகிச்சு.
அவள்
உள்ளே நுழைந்ததும் அந்தக் கதவு தானாக மூடிக்கிச்சு. அறைக்குள்ள கண்ணாடியால்
செய்த கீரிடம் அணிந்த ஒரு கண்ணாடி மனுஷர் இருந்தாரு.. அவர் விண்டாஷ் - 107
ஓட தலைவர்.
மேகலையைக்
கண்டதும் அவர் ஒரு நாற்காயை உத்துப் பார்க்க அது அவளை பாத்து நகர்ந்து
வந்திச்சு. அதில் அவள் உக்கார அது நகர்ந்து நகர்ந்து அவர் முன்னாடி போய்
நிண்ணுச்சு.
கண்ணாடி
கிரீடம் அணிந்த தலைவர் மேகலையைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்.
"நீங்கள்... பூமியிலுள்ள மக்கள் பல தீய செயல்களைச் செய்யறீங்க.
அதை
பூமியிலுள்ள மக்களுக்கு எடுத்துச்சொல்ல நான் உன்னைத் தேர்ந்தெடுத்து
இருக்கிறேன். நீங்கள் நடத்தும் அணுச்சோதனைகள், வெடிக்கும் அணுகுண்டுகள்,
உங்கள் குளிர் பதனப்பெட்டிகள், எரிக்கும் பிளாஸ்டிக்குகள் இவை எத்தனை
எத்தனை விஷ வாயுக்களை வெளியேவிடுது தெரியுமா? அவ்வாயுக்கள் ஓசோன் கவசத்தைக்
கிழிக்குது. அந்தக் கவசம்தான் எங்கள் நாட்டிற்குத் தேவையான மின்காந்த
அலைகளைக் காப்பாத்துது. எங்களுக்கு பாதுகாப்புக் கவசமா இருக்கற மின்
காந்தக் கவசம் பலவீனமடைந்து வருது. அதனால் எங்கள் நாடு மெல்ல மெல்ல உங்கள்
பூமியை நோக்கி எறங்கிட்டிருக்கு. இரண்டும் மோதிக்கிட்டா அவ்வளவுதான் ரெண்டு
உலகமும் உடைந்து சுக்கு நூறாகிடும்.
அதனாலே
உனக்கு நான் ஒரு குறுந்தகடு தர்றேன். அதை உன்னோட கணினியில் செலுத்தி இணைய
தளம் மூலம் உலகிலுள்ள எல்லோருக்கும் காட்டு. வரப்போகும் ஆபத்து பற்றி
எல்லோரும் எச்சரிக்கையா இருக்கட்டும்.'' அப்படீண்ணு சொல்லிட்டு
பக்கத்திலிருந்த அலமாரியைப் பார்த்தார். அதிலிருந்து ஒரு குறுந்தகடு பறந்து
வந்து அவர் முன்னாலெ மெல்ல இறங்கிச்சு.
"நான்
உலகத்தைக் காப்பாத்தப் போறேன். விண்டாஷையும் இங்குள்ள கண்ணாடி
மனிதர்களையும் காப்பாத்தப் போகிறேன். "சந்தோஷத்தாலெ அவளோட மனசு துள்ளிக்
குதிச்சது. அந்தக் குறுந்தகடை எடுத்துக்கொண்டு எந்திருச்சவ அசைந்து வரும்
நாற்காலியைக் கவனிக்காமல் அதன் மேல் மோதிட்டா. "ஐயோ" ண்ணு கத்திகிட்டே
தடுமாறி கீழே விழுந்தாள்.
அப்போ
மேகலையோட அம்மா ஓடி வந்தாங்க. கட்டிலிலிருந்து உருண்டு விழுந்த மேகலையை
தூக்கினாங்க.. "ஏம்மா... ஏதாவது கனவு கண்டயாணு கேட்டாங்க'' மேகலை திரு
திருணு முழிச்சா. சுத்தும் முத்தும் பாத்தா.
"ஆமாம்
அம்மா...'' ண்ணு சொல்லிட்டு மெல்ல சிரிச்சா. அவளுக்கு எல்லாம் புரிஞ்சுது.
மெல்ல எழுந்து நிண்ணா. பாவாடைப் பையைத் தொட்டுப் பார்த்தவள் விழுந்து
விழுந்து சிரிக்கத் தொடங்கினாள்.
பள்ளிக்கூடத்தில் தோழிகளோடு கொத்தாங்கல் விளையாடியது நினைவுக்கு வந்தது. அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
கட்டிலிலிருந்து
விழுந்த மேகலை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கறத பாத்து மேகலையோட அம்மா
ஆச்சரியப்பட்டு அவளையே பார்த்துகிட்டிருந்தாங்க.
Comments
Post a Comment